துவாபர யுகத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர் திருமாலைக் குறித்து இந்த ஸ்தலத்தில் தவமிருந்தார். அவரது தவத்திற்கு மகிழ்ந்த பரந்தாமன் அவருக்குக் காட்சி தந்தார். அப்போது முனிவர், பாற்கடலைக் கடைந்தபோது திருமால் எடுத்த மோகினித் திருக்கோலத்தைக் காட்டியருள வேண்டினார். பெருமாளும் அவ்வாறே காட்சியளித்தார். அதனால் இந்த ஸ்தலம் 'திருமோகூர்' என்று வழங்கப்படுகிறது.
மூலவர் காளமேகப் பெருமாள் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் திருமோகூர் ஆப்தன். தாயாருக்கு மோகூர்வல்லி என்பது திருநாமம். பிரம்மா, இந்திரன், அஜ ருத்ரர் ஆகியோருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
உத்ஸவர் பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். ஆதிசேஷனுக்கும் தங்கக் கவசங்கள் சாத்தப்பட்டுள்ளன. இங்குள்ள சக்கரத்தாழ்வார் ஸந்நிதி விஷேசம். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சந்தான பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
நம்மாழ்வார் 11 பாசுரங்களும், திருமங்கையாழ்வார் 1 பாசுரமுமாக 12 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|